ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

நித்திரவிளை அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஜோக்கர் முகமூடி அணிந்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-10-05 21:01 GMT
கொல்லங்கோடு, 
நித்திரவிளை அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஜோக்கர் முகமூடி அணிந்த ஆசாமிகளை  போலீசார் தேடி வருகிறார்கள். 
 வங்கி ஏ.டி.எம்.
நித்திரவிளையில் இருந்து சின்னத்துறைக்கு செல்லும் சாலையில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் அருகில் ஒரு தனியார் வங்கியுடன் அதன் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் நேற்று காலையில் ஏ.டி.எம்.மையத்துக்கு பணம் எடுக்க சென்றவர்கள் அங்கு எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வங்கி மேலாளர்  புகார் செய்தார். 
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அப்போது, அதில் நள்ளிரவு 2¾ மணிக்கு தலையில் குல்லாவும் முகத்தில் ஜோக்கர் முகமூடியும், கையில் குடையும், கழுத்தில் பையும் வைத்திருந்த 2 மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைவது பதிவாகி இருந்தது. பின்னர், அவர்கள் கேமராவில் முகங்கள் பதிவாகாமல் இருக்க குடையால் மறைத்தபடி ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு ஆயுதங்களால் உடைக்க முயற்சி செய்கின்றனர். பல மணி நேரம் போராடிய பின்பும் அவர்களால் எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முடிய வில்லை. இதனால் அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
ரூ.6¾ லட்சம் தப்பியது
மேலும், அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் ஏ.டி.எம்.மையத்தில் இருந்து 500 மீட்டருக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விட்டு குடையால் முகத்தை மறைத்துக் கொண்டு வருவதும், ஏ.டி.எம்.மையத்தின் அருகில் உள்ள உணவகத்தில் பதுங்கி இருந்ததும், அதன் பின்னர், உணவகத்தில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்தி கட்டிங் எந்திரத்துடன் ஆள் நடமாட்டம் இல்லாதபோது ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைவதும் பதிவாகி இருந்தது.
பணத்தை கொள்ளையடிக்க முடியாததால் கட்டிங் எந்திரம் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்கள் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.6¾ லட்சம் தப்பியது. 
இரு சம்பவத்தில் ஒரே ஆசாமிகள்
இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், நித்திரவிளை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். 
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியிலும் இதேபோல் ேஜாக்கர் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சம்பவத்தில் ஈடுபட்டதும் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்