திருப்புவனத்தில் திதி, தர்ப்பணம் செய்ய தடை
திருப்புவனத்தில் திதி, தர்ப்பணம் செய்ய தடை
திருப்புவனம்
மகாளய அமாவாசையான இன்று திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில் ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்ப்பணம்
திருப்புவனத்தில் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோவிலின் எதிரே உள்ள வைகை ஆற்று கரையில் முன்னோர்களுக்கு தினந்தோறும் திதி மற்றும் தர்ப்பணம் செய்வது வழக்கம். இங்கு திதி, தர்ப்பணம் செய்தால் காசியை விட வீசம் கூடும் என முன்னோர்கள் கூறுவதுண்டு. இதனால் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து திதி மற்றும் தர்ப்பணம் செய்து செல்வார்கள்.
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் நடைபெறும் நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாகும். இதற்காக வைகை ஆற்றுக்குள் நீளமான பந்தல்கள் அமைத்து திதி. தர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடைபெறும். அமாவாசை தினங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்வார்கள்.
தடை
இந்த நிகழ்ச்சிகளில் சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து திதி மற்றும் தர்ப்பணம் செய்து பின்னர் கோவிலில் வழிபாடு செய்வார்கள். வரும் புதன்கிழமை இந்த வருடத்திற்கான மகாளய அமாவாசை வருகிறது.
தற்போது கொரோனா தொற்று காரணமாகவும், அதிகமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் இன்று(புதன்கிழமை) மகாளய அமாவாசை தினத்தன்று நடைபெறும் திதி மற்றும் தர்ப்பணம் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.