ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற அ.தி.மு.க. வேட்பாளரிடம் இருந்து ரூ.1¼ லட்சம் பறிமுதல்

ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற அ.தி.மு.க. வேட்பாளரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-05 18:03 GMT
ஆற்காடு

ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற அ.தி.மு.க. வேட்பாளரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

பறக்கும் படையினர் ரோந்து

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.
இதனைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் ராணிப்பேட்டை சார்பதிவாளர் பஞ்சாட்சரம் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு திமிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது திமிரியை அடுத்த பழையனூர் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. 
இதனைத்தொடர்ந்து திமிரி ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த விநாயகம் (வயது 50) மற்றும் அவருடன் சிலர் சேர்ந்து ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. 

ரூ.1¼ லட்சம் பறிமுதல்

இதனைக்கண்ட பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 
அதனை திமிரி ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருமான வெங்கடாசலத்திடம் ஒப்படைத்தனர்.

அந்த பணத்தை தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலக்கண்ணன் ஆற்காடு சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்