தினத்தந்தி புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-05 17:40 GMT
அரியலூர்
சாலையோரம் கிடக்கும் மரத்தால் நிலைதடுமாறும் வாகன ஓட்டிகள் 
திருச்சி மாவட்டம், தொட்டியம் பண்ணைவீடு அருகில் சாலையோரத்தில் இருந்த ஆலமரம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறுடன் சாய்ந்தது. இந்த ஆலமரத்தின் கிளைகள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் மரம் மட்டும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும்வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் மரம் கிடப்பது தெரியாமல் நிலைதடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளையை அகற்ற வேண்டும், இல்லை எனில் அந்த மரத்தை சுற்றி ஒளிரும் பட்டை அமைக்க வேண்டும். 
ரவிக்குமார், தொட்டியம், திருச்சி. 

பயனற்ற நீர்த்தேக்க  தொட்டி 
புதுக்கோட்டை மாவட்டம், சம்பட்டிவிடுதி பஞ்சாயத்து மேலவிடுதி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில்  நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயனற்ற நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். 
ஜெயக்குமார், மேலவிடுதி, புதுக்கோட்டை. 

பழுதடைந்த மயான வண்டி சரிசெய்யப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் ஊராட்சி அண்ணா நகர், திருவள்ளுவர் நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்ய கொண்டு செல்ல ஊராட்சி சார்பில் மயான வண்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த வண்டி நாளடைவில் பழுதடைந்து உபயோக படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மயான வண்டியை சரிசெய்து தர வேண்டும். 
குணசேகரன், நாரணமங்கலம், பெரம்பலூர். 

எரியாத உயர்  கோபுர மின் விளக்கு 
திருச்சி  அந்தநல்லூர் கிராமத்திற்கு உட்பட்ட ஜீயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்களின் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது இந்த உயர் கோபுர மின் விளக்கு பழுதடைந்துள்ளதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லம் பெண்கள், குழந்தைகள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்பட  அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சுந்தர், ஜீயபுரம், திருச்சி.

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா தெற்கு பரணம் மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். 
சர்மிளா, தெற்கு பரணம், அரியலூர். 

ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் சிந்தலவாடி கிராமத்தில் உள்ள புணவாசிப்பட்டியிலிருந்து மகிலிபட்டி செல்லும் சாலையை கடந்த ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு பணி செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இந்த பணியானது முழுவதுமாக முடிக்கப்படவில்லை. இந்த சாலை வழியாக புணவாசிபட்டி, வீரணம்பட்டி,  அந்தரபட்டி,  கணக்கம்பட்டி போன்ற  ஊர்களுக்கு செல்ல இதுவே முக்கியமான சாலை ஆகும். இந்த சாலை சரியாக இல்லாததால் மழைக்காலங்களில் மழை பெய்தால் மழை நீரானது தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளித்து பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்துகிறது.  மேலும் புணவாசிபட்டி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியும் இதுவே. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும். 
சாமியப்பன், புணவாசிபட்டி, கரூர். 

உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூர் 40-வது வார்டு பிரான்சினா காலனியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது   இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை  அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைக்குமாறு கோட்டுக்கொள்கிறோம். 
தங்கவேல், பிரான்சினா காலனி, திருச்சி.

ஆக்கிரமிப்புகளால் மழைநீர் செல்ல தடை
புதுக்கோட்டை மாவட்டம்,  புதுக்கோட்டை ஒன்றியம், வடவாளம் ஊராட்சி தெற்கு செட்டியாபட்டி சாஸ்திரி புதுக்குளத்திற்கு வரும் நீர் வரத்து வாரியை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனால் புதுக்குளத்திற்கு மழைநீர் செல்லமுடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செட்டியாபட்டி, புதுக்கோட்டை.

பூங்கா அமைக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பொழுதுபோக்கிற்காகவும், காலை, மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வதுற்கும் இப்பகுதியில் பூங்கா இல்லாமல் உள்ளது. எனவே இப்பகுதியில் பூங்கா அமைக்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டுகிறோம். 
துரைராஜு,   கீழப்பழுவூர், அரியலூர். 

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணி 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர்-எசனை செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இந்த சாலையில் எசனையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை போடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு  நீண்ட நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லக்கூடிய விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு  வருகிறார்கள். மேலும் சின்னாங்குட்டை பகுதி பொதுமக்கள் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மீதமுள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.ராமைய்யா, பாலையூர், பெரம்பலூர். 

கழிவுநீர் குழாயில் உடைப்பு 
திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் முன்புறம் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் கழிவுநீர் சாலையில் சென்று ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பழனி, மேலசிந்தாமணி, திருச்சி. 

அடிப்படை வசதிகள் செய்துதரப்படுமா? 
திருச்சி மாவட்டம், துறையூர் முசிறி ரோடு அருகிலுள்ள தீரன் நகர் மற்றும் அதை சுற்றி உள்ள காவிரி நகர், அம்மன் நகர், விஜய் அவன்யூ சர்பிடி நகர் முதலிய பகுதியில் குடிநீர், சாலை, தெரு விளக்கு ஆகிய வசதிகள்  இல்லாமல் உள்ளது. தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். முறையான சாலை வசதி இல்லாததால் வாகன ஓட்டிகளும், குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
முகுந்தன், துறையூர், திருச்சி. 

கழிவுநீர் வாய்க்காலான வரத்து வாரி 
திருச்சி மாவட்டம், முசிறி அட்டாளப்பட்டி ஏரி நீர் வரத்து வாரியான முசிறி உழவர் சந்தையின் வடபுறம் உள்ள வரத்துவாரி தற்போது செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் ஏரிக்கு மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வரத்துவாரி தூர்ந்துபோய் கழிவுநீர் வாய்க்கால் போல் காட்சி அளிக்கிறது. வரத்து வாரியை சரிசெய்து, ஏரியில் மழைநீரை சேகரித்தால் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும், எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தமிழ்சிவா, முசிறி, திருச்சி. 

வடிகால் வாய்க்கால் இல்லாததால் சாலையில் தேங்கி கழிவுநீர் 
திருச்சி மாவட்டம்,  சமயபுரம் ச.கண்ணனூர் பேரூராட்சி இந்திரா காலனியில் 4-வது தெரு, அண்ணா தெருவில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 
ஆனந்தராஜ், ச.கண்ணனூர், திருச்சி. 

மின்விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி விபத்து 
திருச்சி மாநகர பகுதிகளில் மிக முக்கிய பகுதி  திருச்சி மன்னார்புரம். பை-பாஸ் வசதி ஏற்படுத்தபட்டுள்ளதால் மாநகரத்திற்குள் வர அவசியம் இல்லாத வாகனங்கள் மேம்பாலத்தில் மின்னல் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருக்கின்ற ஒரு பகுதியாகும்.  திருச்சி மாநகர எல்லைக்குள் வரும் இந்த மன்னார்புரம்-பஞ்சப்பூருக்கு இரவு நேரங்களில் செல்ல போதுமான மின்விளக்கு வசதி இல்லை. இதனால் அடிக்கடி பெரும் விபத்துக்களும், குற்ற செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கிஷோர்குமார், திருச்சி.

மேலும் செய்திகள்