தூத்துக்குடியில் குடிப்பழக்கத்தைமறக்க சிறப்பு பூஜை செய்வதாக கூறி 22 பவுன் நகை மோசடி இளம்பெண் கைது
தூத்துக்குடியில் குடிப்பழக்கத்தை மறப்பதற்கு சிறப்பு பூஜை நடத்துவதாக கூறி 22 பவுன் நகையை மோசடி செய்ததாக இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் குடிப்பழக்கத்தை மறப்பதற்கு சிறப்பு பூஜை நடத்துவதாக கூறி 22 பவுன் நகையை மோசடி செய்ததாக இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சிறப்பு பூஜை
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 3-வது தெருவை சேர்ந்தவர் அருணாசலபாண்டி. இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது 30). அருணாசலபாண்டிக்கு மதுகுடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பழக்கத்தை மறக்க வைப்பதற்காக சிறப்பு பூஜை நடத்தலாம் என்று பக்கத்து வீட்டை சேர்ந்த பத்திரகாளிமுத்து மனைவி திவ்யா (22), சீதா லட்சுமியிடம் கூறினாராம். இந்த பூஜையில் நகையை வைத்து நடத்த வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
மோசடி
இதனை நம்பிய சீதாலட்சுமி தன்னுடைய 22 பவுன் தங்க நகையை பூஜைக்காக கொடுத்து உள்ளார். பூஜை முடிந்து சிலவாரங்கள் ஆகியும் நகையை திவ்யா திருப்பி கொடுக்கவில்லையாம். இதனால் சீதாலட்சுமி, திவ்யாவிடம் நகையை திருப்பி கேட்டு உள்ளார். அப்போது, திவ்யா, பத்திரகாளிமுத்து ஆகியோர் நகையை கொடுக்க மறுத்து மிரட்டினார்களாம். தொடர்ந்து நகையை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
கைது
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்கு பதிவு செய்து திவ்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.