கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-05 13:09 GMT
தேனி: 


காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.
அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இளைஞர் பெருமன்றம்
இதேபோல், கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சரவணபுதியவன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட துணைச்செயலாளர் ஹரிகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு விவசாயிகள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், உத்தரபிரதேச மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்