நடுரோட்டில் பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து
தேனி போலீஸ் நிலையம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு நடுரோட்டில் பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
குடும்ப தகராறு
தேனி தபால் நிலைய ஓடைத்தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 36). டீக்கடை தொழிலாளி. இவருடைய மனைவி கமலா (39).
பாண்டியராஜ், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக கமலா தனது கணவரை பிரிந்து மதுராபுரியில் வசித்து வருகிறார். மேலும் அவர் தேனியில் உள்ள தையல் தொழிற்கூடத்தில் வேலைக்கு சென்று வந்தார்.
கத்திக்குத்து
இந்நிலையில் நேற்று, கமலா வேலை முடிந்து என்.ஆர்.டி. சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவரை பின்தொடர்ந்து பாண்டியராஜ் வந்தார். தேனி போலீஸ் நிலையம் அருகில் பெரியகுளம் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கமலாவை அவர் வழி மறித்தார். பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கமலாவை நடுரோட்டில் சரமாரியாக குத்தினார். இதில் அவருடைய தோள்பட்டை, கை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பாண்டியராஜை மடக்கிப் பிடித்தனர். மேலும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்தும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பாண்டியராஜை ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த கமலாவை ஒரு ஆட்டோவில் ஏற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
கைது
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தனர். விசாரணையில் அவர், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்தியதாக கூறினார்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.