கடையடைப்பு போராட்டம்
கம்பத்தில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பம்:
கம்பத்தில் கம்பராயப்பெருமாள் கோவிலை சுற்றி 92 கடைகள், 184 குடியிருப்புகள் உள்ளன. இந்த கடைகள், குடியிருப்புகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை வாடகையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனை கண்டித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பில் கோவிலை சுற்றியுள்ள கடைகளை அடைத்து நேற்று போராட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் சுருளி தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது குடியிருப்போர் நலசங்கத்தினர் கோவில் செயல் அலுவலரிடம் மனு கொடுப்பதற்காக கோவில் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு செயல் அலுவலர் இல்லாததால் கோட்டை மைதானத்தில் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மனு கொடுக்க மட்டும் தான் அனுமதி, போராட்டம் நடத்தக்கூடாது என்று போலீசார் கூறினர். இதனால் போராட்டாக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) போத்தி செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினார். இதைத்தொடர்ந்து செயல் அலுவலர் நேரில் வந்து மனுவை பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து செயல் அலுவலரிடம் கேட்டபோது, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர் அந்த மனு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.