பல்லடம்,
பல்லடம் அருகே பெட்ரோலை ஊற்றி வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் பிணம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாச்சாங்காட்டுப்பாளையம் உள்ளது. இங்குள்ள குட்டை பகுதியில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை பார்வையிட்டனர். அந்த வாலிபரின் உடல் குப்புற கிடந்தது. முதுகு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகள் தீயில் கருகி இருந்தது. அந்த வாலிபரின் உடல் அருகே பெட்ரோல் நிரப்பி கொண்டு வரப்பட்ட பாட்டில் ஒன்றும், தீப்பெட்டி ஒன்றும் கிடந்தது.
அந்த வாலிபர் கருப்பு நிறத்தில் பேண்ட் அணிந்து இருந்தார். அவர் அணிந்திருந்த சட்டை தீயில் கருகி இருந்தது. அவரது பேண்ட் பாக்கெட்டில் செல்போன் மற்றும் அடையாள அட்டை ஏதும் உள்ளதா என்று போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் எதுவும் இல்லை. இதனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதையடுத்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
எரித்துக்கொலை
மேலும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகள் அந்த வாலிபரை கடத்தி வந்து உயிரோடு எரித்து கொன்றார்களா அல்லது வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு, உடலை அங்கு கொண்டு வந்து போட்டு எரித்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.
முதற்கட்டமாக, பல்லடம் பகுதியில் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் யாராவது காணாமல் போனார்களா, அல்லது வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தவர்கள் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு வராமல் உள்ளார்களா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த வாலிபர் யார் என்பது குறித்து அடையாளம் கண்டால்தான், கொலையாளிகளின் விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.