கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ கல்லூரி மாணவர் திடீர் சாவு
கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ மாணவர் திடீரென்று உயிரிழந்தார்.
வில்லியனூர், அக்.3-
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சங்கல்தீப் ரெட்டி (வயது 20). இவர் வில்லியனூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கூடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சங்கல்தீப் ரெட்டி, கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர், விடுதியில் சென்று அவரது அறையில் படுத்துள்ளார். இவர் தோல் நோய்க்காக தொடர்ந்து ஓமியோபதி மருந்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று அறையில் மங்கி கிடந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் சங்கல்தீப் ரெட்டியை மீட்டு அவர் படிக்கும் அதே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கல்தீப் ரெட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.