கிளியூர் நீர்வீழ்ச்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

கிளியூர் நீர்வீழ்ச்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-01 20:47 GMT
ஏற்காடு,
ஆக்கிரமிப்பு கடைகள்
ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு செல்வது வழக்கம். இதனால் அங்குள்ள வாகன நிறுத்துமிடம் அருகில் உள்ளூர் வாசிகள் சிலர் தள்ளுவண்டி கடை மற்றும் சிறிய வகை கடைகளை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நீர்விழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை என்றும், அந்த இடத்தை சிறிய வகை கடைகள் ஆக்கிரமித்துள்ளதாவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அந்த இடம் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் என்பது தெரியவந்தது. அப்போது இந்த இடத்தில் வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் கடைகள் வைக்கக்கூடாது. எனவே கடைகளை காலி செய்து விடுங்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
அதிகாரிகளின் எச்சரிக்கையை சிறிய கடைக்காரர்கள் கண்டுகொள்ளாமல் அங்கேயே கடைகள் வைத்திருந்தனர். இதற்கிடையே ஏற்காடு தாசில்தார் ரவிகுமார் தலைமையில் அதிகாரிகள் அங்கு திடீரென அதிரடி ஆய்வு நடத்தினர்.
கடைகள் அகற்றம்
அங்கு சென்ற அரசு அதிகாரிகள், பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே கடைகளை அகற்ற இன்னும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று வியாபாரிகள் கூறினர். அதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து வியாபாரிகள் தாங்களாகவே அந்த கடைகளை காலி செய்து கொண்டனர். இந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
\

மேலும் செய்திகள்