லாரி மோதி தலைமை ஆசிரியர் பலி

சிவகாசியில் லாரி மோதி தலைமை ஆசிரியர் பலியானார்். தப்பிச்செல்ல முயன்ற டிரைவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

Update: 2021-10-01 20:12 GMT
சிவகாசி, 
சிவகாசியில் லாரி மோதி தலைமை ஆசிரியர் பலியானார்். தப்பிச்செல்ல முயன்ற டிரைவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். 
தலைமை ஆசிரியர் 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆசாரி காலனியை சேர்ந்தவர் சத்யநாராயணன் (வயது 53). இவர் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள வடமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக சிவகாசிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். 
பின்னர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி, தலைமை ஆசிரியர் சத்யநாராயணனின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய சத்யநாராயணன் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
பிரேத பரிசோதனை 
இந்த விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த முருகேசன் (54) என்பவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். 
சம்பவ இடத்தில் இருந்து லாரியை அவர் விருதுநகரை நோக்கி வேகமாக இயக்கிய போது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச்சென்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் லாரியை திருத்தங்கல் ெரயில்வே கேட் அருகே மடக்கிப்பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  சத்யநாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்