கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை பகுதியில் கன மழை
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை பகுதியில் கன மழை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் நேற்று காலை முதல் மதியம் வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பகல் 1 மணியளவில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம்செல்ல செல்ல கன மழையாக பொழிந்தது. இதனால் கணக்கப்பிள்ளை தெரு, கவரை தெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீருடன் கழிவு நீரும் இரண்டற கலந்து குளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் சேலம் மெயின் ரோடு, காந்திரோடு ஆகிய சாலைகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியதால் குடியிருப்பு வாசிகள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த மழை கள்ளக்குறிச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்தது.
அதேபோல் மூங்கில்துறைப்பட்டில் நேற்று மாலை 3 மணி முதல் 3.30 மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. போலீஸ் நிலையம் எதிரே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் தடுமாற்றத்துடன் சிரமப்பட்டு சென்னர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மதியம் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு, கெடிலம் கருவேப்பிலை பாளையம், சிறுத்தனூர், பாதுர், வண்டிப்பாளையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திடீரென பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் திக்குமுக்காடினர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சீரான வேகத்தில் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.