பிரபல பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல்; கைதான ஆஸ்பத்திரி ஊழியர் தப்பி ஓட்டம்

பிரபல பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான ஆஸ்பத்திரி ஊழியர், போலீசாரை ஏமாற்றி விட்டு தப்பி ஓடி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-01 08:45 GMT
கொலை மிரட்டல்
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி உரிமையாளரான பெண் டாக்டர் ஒருவர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

எங்கள் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்த சிவகுமார் (வயது 44) என்பவரின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை வேலையில் இருந்து நீக்கி இருந்தோம். இதனால் கோபமடைந்த சிவகுமார், ஆஸ்பத்திரியில் வேலை செய்து வரும் பெண்களுக்கும், எனக்கும் பாலியல் தொல்லை தருவதுடன், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

தப்பி ஓட்டம்
இது குறித்த புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக வழக்கமான உடல் பரிசோதனைக்காக நேற்று காலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.அப்போது போலீசாரை ஏமாற்றி விட்டு சிவகுமார், நைசாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய சிவகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு இருப்பதாக பொய் தகவல் கொடுத்த வழக்கில் ஏற்கனவே சிவகுமார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்