‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி; கட்டிபாளையம் அரசுப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கட்டிபாளையம் அரசுப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
நொய்யல்,
அரசு பள்ளி
திருக்காடுதுறை அருகே கட்டிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி முழுவதும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் அருகே காட்டுப்பகுதியாக இருப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஐந்துகளின் நடமாட்டம் உள்ளது.
இதனால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்து வந்தது. எனவே பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தரக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு
இதையடுத்து, கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிக்குமார், விஜயலட்சுமி ஆகியோர் கட்டிபாளையம் அரசு பள்ளியில் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் விரைவில் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தனர். ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து சுற்றுச்சுவர் கட்டித்தர இருப்பதால் அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.