நாட்டறம்பள்ளி அருகே போலி டாக்டர் மீண்டும் கைது

நாட்டறம்பள்ளி அருகே போலி டாக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-30 18:00 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே போலி டாக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

போலி டாக்டர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை பூர்வீகமாக கொண்டவர் பெருமாள் என்கிற ஜெயராமன் (வயது 55). இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு சுமார் 25 வருடத்திற்கும் மேலாக புதுப்பேட்டை ராஜவீதி தெருவில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.

இவர் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் மீண்டும் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்ததாக கூறப்படுகிறது.

மீண்டும் கைது

சென்னையில் உள்ள ஊரக பணிகள் நல இணை இயக்குனர் விஸ்வநாதன், அரசு மருத்துவ அலுவலர் குமாரவேல், வேல்முருகன், துணைபோலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் ஆகியோர் உள்பட 10 பேர் கொண்ட குழு நேற்று காலை ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கில் சோதனை செய்தனர். அப்போது அவர் சிகிச்சையளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து ஜெயராமனை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஜெயராமனை ஒப்படைத்தனர்.
 சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ஜெயராமனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்