வாகன ஷோரூம்களில் நிர்வாண நிலையில் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது
வாகன ஷோரூம்களில் நிர்வாண நிலையில் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது
கோவை
கோவை, மதுரை உள்ளிட்ட 17 இடங்களில் வாகன ஷோரும்களில் நிர்வாண நிலையில் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தை கொரோனா நோயாளிகளுக்கு செலவழித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாகன ஷோரூம்களில் திருட்டு
கோவை நகரில் சிங்காநல்லூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மோட்டார் சைக்கிள், கார் ஷோரூமில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வாகன ஷோரூமில் ரூ.12 லட்சம் திருட்டு போனதாக அந்த நிறுவன மேலாளர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷோரூமில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், நிர்வாண நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் ஷோரூமுக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
நிர்வாண திருடன் கைது
இந்த நிலையில், சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்டம் ஓக்கூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பாண்டியன் கோவையில் உள்ள 3 வாகன ஷோரூம்களில் நிர்வாண நிலையில் புகுந்து திருடியது தெரியவந்தது. மேலும் இதுபோன்று சென்னை, மதுரை உள்ளிட்ட 14 இடங்களிலும் திருடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
17 இடங்களில் கைவரிசை
இதுதொடர்பாக கைதான பாண்டியன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது :-
நான் வாகன ஷோரூம்களை குறிவைத்து திருடுவேன். இதுபோன்ற ஷோரூம்களில் ரொக்கப்பணம் மொத்தமாக வைத்து இருப்பார்கள் என்பதால் வாகன ஷோரூம்களை பகலில் தேர்வு செய்து இரவில் திருடுவேன்.
ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே செல்லும்போது சட்டை, பேண்ட் கம்பியில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அனைத்து உடைகளையும் கழற்றி வைத்துவிட்டு ஷோரூம்களில் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். மேலும் யாரிடமும் பிடிபடக்கூடாது என்பதற்காக ஆடை இன்றி சென்று இந்த திருட்டுகளில் ஈடுபட்டு வந்தேன்.
கோவை நகரில் சிங்காநல்லூர், ராமநாதபுரம், சரவணம்பட்டி ஆகிய இடங்களிலும் மற்றும் சென்னை, மதுரை உள்பட 17 இடங்களில் இதுபோன்று திருடி உள்ளேன்.
கொரோனா நோயாளிகளுக்கு செலவழித்தேன்
திருடிய பணத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட எனது உறவினர்களின் சிகிச்சைக்கு செலவு செய்தேன். இதுபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வறுமை நிலையில் இருந்தவர்களுக்கும் பண உதவி செய்தேன். மேலும் எனக்கு காது கேட்கும் கருவிகள் வாங்குவதற்கும் பணம் செலவழித்தேன்.
இவ்வாறு பாண்டியன் கூறியதாவதாக போலீசார் தெரிவித்தனர்.
பாண்டியன் பழனியில் தங்கியிருந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த வீட்டில் அவர் பல இடங்களில் பணத்தை பிரித்து மறைத்து வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் திருட்டு வழக்கில் கைதான பாண்டியனை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.