தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 எந்திரங்களில் மின்உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2 எந்திரங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த எந்திரங்கள் இயங்குகின்றன. இதனால் அவ்வப்போது பழுது ஏற்பட்டு மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மின்உற்பத்தி எந்திரங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் உள்ள 2, 3-வது மின்சார உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மீண்டும் மின்உற்பத்தியை தொடங்க நிலக்கரி இறக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நேற்று கப்பல் மூலம் 60 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டது. நிறுத்தப்பட்ட 2 எந்திரங்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
--------------