கோடப்பமந்து கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்தது

ஊட்டியில் கோடப்பமந்து கால்வாய் தடுப்புச்சுவர் சாலையுடன் இடிந்து விழுந்தது. இதனால் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-30 13:59 GMT
ஊட்டி

ஊட்டியில் கோடப்பமந்து கால்வாய் தடுப்புச்சுவர் சாலையுடன் இடிந்து விழுந்தது. இதனால் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

கோடப்பமந்து கால்வாய்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் கோடப்பமந்து கால்வாய் உள்ளது. தொட்டபெட்டா கீழ் பகுதியான கோடப்பமந்து பகுதியில் இருந்து நகரின் நடுவே கால்வாயில் செல்லும் மழைநீர் ஊட்டி ஏரியில் சேகரமாகிறது. கால்வாய் மத்தியில் பாதாள சாக்கடை திட்டம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய 83 ஆழ்துளை துவாரங்கள் போடப்பட்டது.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் தூர்வாரும் பணியின்போது பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கால்வாயில் கலந்தது. இதனால் கால்வாய் மற்றும் ஏரி மாசடைந்தது. இதை தடுக்க ரூ.5 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. 

தடுப்புச்சுவர் இடிந்தது

கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை இருந்ததால் பணி கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடர் மழை காரணமாக பணி பாதிக்கப்பட்டது. கோடப்பமந்து கால்வாயை ஒட்டி லோயர் பஜாரில் தலைகுந்தா, காந்தல் செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்கின்றன. மேலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கால்வாய் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவர் திடீரென சாலையுடன் பெயர்ந்து விழுந்தது. இதனால் குறிப்பிட்ட பகுதி அந்தரத்தில் தொங்குகிறது. அங்கு வாகனங்கள் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

பணி பாதிப்பு

பழைய சாக்கடை குழாய்களை அகற்றி புதிய குழாய்களை பொருத்துவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. மேலும் தொடர் மழையால் தடுப்புச்சுவர் மழைநீரில் ஊறிப்போயிருந்தது. இதனால் சாலையுடன் திடீரென பெயர்ந்து விழுந்ததால், குழாய்களை மாற்றும் பணியை தொடர்ந்து மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே ஓரிடத்தில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து, அதனை சரிசெய்த பின்னர் பணி தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வருகிற நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் பணியை மேற்கொள்வதில் தொய்வு ஏற்படும். எனவே குழாய்களை மாற்றி அமைக்கும் பணி, ஆழ்துளை துவாரங்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்