பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரபாண்டி
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் பிரச்சினை
திருப்பூர் வீரபாண்டி, சவுடேஸ்வரி நகர், முத்துநகர், மணல்காடு, காளி குமாரசாமி நகர், ஜே.ஜே.நகர் புளியங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக குடிநீர் தெருவிளக்கு, தார்ச்சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வீரபாண்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4 மண்டல பொறுப்பாளர் அருணாச்சலம் தலைமையில் வீரபாண்டி பஸ் நிறுத்தும் முன்பு திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது
முற்றுகை
வீரபாண்டி பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறைந்த நேரத்திற்கு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பலரும் தவிர்த்து வருகின்றனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் குப்பை குவிந்து கிடக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்த வருவதில்லை.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தார்ச்சாலை, சாக்கடை கால்வாய் வசதி, தெரு விளக்கு என பல பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் தொடர்ந்து சாலை மறியலிலும் கண்டிப்பாக ஈடுபடுவோம்.
இவ்வாற அவர்கள் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து . அனைத்து பகுதியிலும் விரைவாக குடிநீர் மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சினைகள் குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.