அரசுப்பணி வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.1.61 கோடி மோசடி; அரசு ஊழியர்கள் 2 பேர் கைது
பெங்களூருவில் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.1.61 கோடி வாங்கி மோசடி செய்ததாக அரசு ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.1.61 கோடி வாங்கி மோசடி செய்ததாக அரசு ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசு வேலை வாங்கி...
பெங்களூரு நகரில் வசித்து வருபவர் மஞ்சுநாத். இவர், தன்னுடைய சகோதரருக்கு விதானசவுதாவில் தினக்கூலி தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் ஏஜென்சி எடுத்து கொடுக்க விரும்பினார். அப்போது தொழிலாளர் சங்க துணை தலைவரான ராதா உமேஷ் என்பவரின் பழக்கம் மஞ்சுநாத்திற்கு கிடைத்தது. அவர் கூறிய தகவலின் பேரில், விதானசவுதாவில் அரசு ஊழியர்களாக பணியாற்றும் ஸ்ரீலேகா மற்றும் சம்பத்குமாரை சந்தித்து மஞ்சுநாத் பேசி இருந்தார்.
அப்போது ஏஜென்சி வாங்கி கொடுப்பது மிகவும் சிரமம் என்றும், விதானசவுதாவில் உள்ள உள்ளாட்சி துறை அலுவலகத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் அந்த வேலையை வாங்கி கொடுப்பதாகவும், எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும், வேலை வாங்கி கொடுப்பதாகவும் மஞ்சுநாத்திடம் 2 பேரும் கூறியுள்ளனர்.
ரூ.1.61 கோடி கொடுத்தார்
இதையடுத்து, தனது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் என 55 பேருக்கு வேலை வேண்டும் என்று மஞ்சுநாத் கூறியுள்ளார். இதற்காக மஞ்சுநாத்திடம் இருந்து ஒட்டு மொத்தமாக ஸ்ரீலேகாவும், சம்பத்குமாரும் ரூ.1 கோடியே 61 லட்சத்தை வாங்கி இருந்தார்கள். அந்த பணத்தை 2 பேரும் பங்கிட்டு கொண்டு இருந்தார்கள். அத்துடன் பணம் வாங்கியவர்களுக்கு உள்ளாட்சி துறையில் அரசு ஊழியர்களுக்கான வேலை கிடைத்திருப்பதாக கூறி பணி நியமன ஆணை கடிதத்தை சம்பத்குமார் வழங்கி இருந்தார்.
அவ்வாறு பணி நியமன ஆணை கடிதத்தை வாங்கிய ராஜேஷ்குமார் என்பவர் விதானசவுதாவுக்கு சென்று, அந்த கடிதத்தை கொடுத்தார். அப்போது அது போலியானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மஞ்சுநாத்திடம் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி மற்ற 54 பேருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த பணி நியமன ஆணை கடிதமும் போலியானது என்று தெரியவந்தது.
2 ஊழியர்கள் கைது
இதையடுத்து, நடந்த சம்பவங்கள் குறித்து ராஜேஷ்குமார் மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் விதானசவுதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி அரசு ஊழியர்களான ஸ்ரீலேகாவும், சம்பத்குமாரும் ஒட்டு மொத்தமாக ரூ.1.61 கோடி வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
அத்துடன் போலி நியமன ஆணை கடிதத்தையும் அவர்கள் கொடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீலேகா, சம்பத்குமாரை விதானசவுதா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.