வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, செப்.30-
புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில் கடத்தல்
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் வாங்கி தமிழக பகுதிக்கு கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வாகன சோதனை
இதையடுத்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் திருக்கனூர் போலீசார் கடை வீதியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர்.
அவர் வைத்திருந்த பையில் 288 குவார்ட்டர் பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தேத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 31) என்பதும், இவரது உறவினர் ஒருவர் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். எனவே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து பாலமுருகனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 288 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரி கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர். கலால் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.