பள்ளி மாணவிகளை தொடர்ந்து ஆசிரியைக்கும் கொரோனா

பள்ளி மாணவிகளை தொடர்ந்து ஆசிரியைக்கும் கொரோனா தொற்று உறுதியானது

Update: 2021-09-29 19:44 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் நகரில் இயங்கி வரும் ஒரு அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்த மாணவிகளில் ஒருவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கொரோனா மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொண்டார். மருத்துவ பரிசோதனை முடிவில் அந்த மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் பயின்ற சக மாணவிகள் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அந்த பள்ளிக்கு நேற்று முதல் வருகிற 3-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி மூடப்பட்டது. 
இந்நிலையில் அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த பள்ளி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஏற்கனவே பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரே பள்ளியில் 7 மாணவிகள், ஒரு ஆசிரியை கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் அனைத்து பள்ளிகளிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்