மொபட்டில் சென்ற பெண்களிடம் 17 பவுன் நகை பறிப்பு
போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே மொபட்டில் சென்ற பெண்களிடம் 17 பவுன் நகை பறிக்கப்பட்டது.
மதுரை
போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே மொபட்டில் சென்ற பெண்களிடம் 17 பவுன் நகை பறிக்கப்பட்டது.
பெண்ணிடம் நகைபறிப்பு
மதுரை புதூர் அடுத்த கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள்(வயது 34). நேற்று முன்தினம் மதியம் இவர் ஊருக்கு செல்ல இருந்த அவருடைய தங்கையை கோரிப்பாளையம் பஸ் நிறுத்ததில் இறக்கி விட மொபட்டில் அழைத்து சென்றார். வண்டியை பேச்சியம்மாள் ஓட்டி கொண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த ஒருவர் வந்து கொண்டிருந்தார். திடீரென்று அவர் பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்து கொண்டு வேகமாக தப்பி சென்றார். அப்போது அந்த பெண் நகையை பிடித்து கொண்டதால் சுமார் ஒரு பவுன் நகை மட்டும் பறிபோனது. அதில் மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் லேசான காயத்துடன் தப்பினர்.
16 பவுன் நகை
போலீஸ் கமிஷனர் அருகே நடந்த சம்பவம் என்பதால் போலீசார் உடனே அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த நபர் நகையை பறித்து முன்னாள் சென்ற ஆட்டோ டிரைவரிடம் கொடுத்து செல்வது போன்று பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது நடந்த சிலமணி நேரம் கழித்து போலீஸ் கமிஷனர் பின்புறம், தல்லாகுளம் போலீஸ் நிலையம் அருகே மற்றொரு சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்தது. இதில் நாராயணபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி சரண்யா(34). இவர் மொபட்டில் தல்லாகுளம் போலீஸ் நிலையம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில பின்தொடர்ந்து வந்த மர்மநபர், சரண்யா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 16 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டார்.
போலீசார் தேடுதல் வேட்டை
இந்த இருசம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மதியம் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர் போன்று இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். நகரில் இரு சம்பவங்களில் பெண்களை குறித்து வைத்து நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.