‘வாட்ஸ்அப்’பில் வீடியோ பதிவிட்டு தொழிலாளி தற்கொலை
குடியாத்தத்தில் வாட்ஸ்-அப்பில் வீடியோ பதிவிட்டு விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் வாட்ஸ்-அப்பில் வீடியோ பதிவிட்டு விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று சக தொழிலாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்- பலமநேர் ரோடு பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 28). இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி அவ்வை நகர் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் விசைத்தறி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். கடன் பிரச்சினை மற்றும் சரிவர கூலி கிடைக்காததால் விரக்தியடைந்த நிலையில் இருந்துள்ளார்.
ஜெயக்குமார் நேற்று அதிகாலையே தறிக்கூடத்திற்கு சென்று, விசைத்தறி தொழிலாளர்கள் வாட்ஸ்-அப் குரூப்பில், தான் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ பதிவிட்டு, தறிகூடத்தில் உள்ள ஜன்னலில் கயிற்றால் தூக்குப்போட்டுள்ளார். காலை சுமார் 5 மணி அளவில் வாட்ஸ்-அப் பார்த்த சக தொழிலாளர்கள் உடனடியாக தறிக்கூடத்திற்கு சென்று பார்த்தபோது ஜெயக்குமார் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உதவி கலெக்டரிடம் மனு
ஜெயக்குமாரின் தற்கொலையை தொடர்ந்து சக விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாடு கைத்தறி விசைத்தறி நெசவு தொழிலாளர்கள் நல சங்கத்தினர் உள்பட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்களிடம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய நிர்வாகிகளை உதவி கலெக்டரிடம் நேரில் சந்திக்க அழைத்துச் சென்றனர்.
ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்
விசைத்தறி தொழிலாளர்கள் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் தாசில்தார் லலிதா ஆகியோரிடம் குடியாத்தத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உடனடியாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு வாரம்தோறும் கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலுவையிலுள்ள கூலி பாக்கியை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அப்போது பிரச்சினைகள் குறித்து உடனடியாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும் கூலி உயர்வு, நிலுவைத் தொகை குறித்து விசைத்தறி உற்பத்தியாளர்களிடம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உதவி கலெக்டர் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.