நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் லாரி உரிமையாளர் மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் லாரி உரிமையாளர் மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் லாரி உரிமையாளர் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி உரிமையாளர்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள காளிச்செட்டிபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவர் லாரி வாங்குவதற்காக பரமத்திவேலூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ.7 லட்சம் கடன் பெற்றார். அத்தோடு தன்னிடம் இருந்த ரூ.3 லட்சத்துடன் சேர்த்து ரூ.10 லட்சத்திற்கு லாரி ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார்.
அதற்கு மாதந்தோறும் தவணை தொகை செலுத்திய அவர், இதுவரை வட்டியுடன் ரூ.3 லட்சம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாகவும், டீசல் விலை உயர்வாலும் லாரிக்கு சரிவர லோடு கிடைக்கவில்லை. இதனால் தனியார் வங்கியில் பெற்ற கடனுக்கு மாதந்தோறும் தவணை செலுத்தாமல் இருந்து உள்ளார். அதன் காரணமாக தனியார் வங்கி மணிகண்டனின் லாரியை பறிமுதல் செய்து ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
அதனால் மீதித்தொகையை செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தன்னை நிர்பந்தம் செய்வதாகவும், ஆனால் லாரியின் தற்போதைய மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் எனவும் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் மண்எண்ணெய் கேனுடன் வந்தார்.
இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் மணிகண்டன், அவருடைய மனைவி பொன்மணி (26) ஆகியோர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மீட்டு விசாரணைக்காக நல்லிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.