தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-09-29 18:08 GMT
‘புகார் பெட்டி’க்கு நன்றி
திருச்சி மலைக்கோட்டை மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெருவில் சாலையின் நடுவில் அமைந்துள்ள பாதாளசாக்கடையின் மேல் மூடி பழுதடைந்து பள்ளமாக இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி புகார் பெட்டி’யில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுவாமிநாதன், திருச்சி.
இருளில் மூழ்கிய சாலை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதி சுத்தமல்லி பிரிவுசாலையில் உயர்மின்கோபுர கம்பம் உள்ளது. இதில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளதால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. கும்பகோணம், சென்னை போக்குவரத்து முக்கிய சாலையாக உள்ளது. அதிக வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. பிரிவு சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதியழகன், தா.பழூர், அரியலூர்.
பழுதடைந்த சாலையால் அவதி
திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் பஞ்சாயத்து, கூத்தூர் வழி பிச்சாண்டார் கோவில் ரெயில் நிலைய  தார் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் இரவில் செல்லும்  பெண்கள் அச்சமடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசுப்பிரமணியம், திருச்சி.
குடிநீருக்காக ஏங்கும் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தை சேர்ந்த கொத்தமங்கலம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட சிதம்பரவிடுதி பகுதியில் சோகரன் குடியிருப்பு, மோயன் குடியிருப்பு, கோணன் குடியிருப்பை சார்ந்த 50 குடும்பங்களுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் 2 மாதங்கள் ஆகியும் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்குட்டுவன், புதுக்கோட்டை.
அபாயகரமான மின்கம்பம் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தாலுகா எதுமலை ரோடு அய்யனாபுரம் காலனியில் அபாயகரமான நிலையில் மின்கம்பம் உள்ளது. பலத்த காற்று வீசினால் இந்த மின் கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உயிரிழப்பு ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
விஜய் மாணிக்கம், திருச்சி.
குப்பைகளால் சுகாதார கேடு 
திருச்சி மாவட்டம், மேற்கு தொகுதி, 52 வார்டு, 9-வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. பிறகு அந்த குப்பைகளை அகற்றாமல் நடைபாதையில் போட்டுவிட்டு சென்று உள்ளனர்.  இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  கொசு தொல்லையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், கொசு மருந்தையும் தெளிக்க வேண்டும்.
வெங்கடேஷ்வரன், திருச்சி.
குரங்குகள் தொல்லை அதிகரிப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா திருவெள்ளறை பெருமாள் கோவில் அருகில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
திசைகாட்டி பலகை அமைக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், மருங்காபுரி  தாலுகா, கல்லுப்பட்டியில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை 38-ல் மதுரை மார்க்கத்தில் ஒரு பஸ் நிறுத்தம், திருச்சி மார்க்கத்தில் ஒரு பஸ் நிறுத்தம் என 2 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் திருச்சி மார்க்கத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் "கல்லுப்பட்டி" என்ற ஊர் பலகை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இல்லாமல் உள்ளது. மேலும் கல்லுப்பட்டிக்கு மேற்கேயுள்ள முக்கிய ஊர்களான மருங்காபுரி -3 கி.மீ., புத்தாநத்தம் 10 கி.மீ. என்ற திசைகாட்டி பலகையும், கிழக்கேயுள்ள தெ.இடையப்பட்டி - 2 கி.மீ., பாலக்குறிச்சி -9 கி.மீ. என்ற திசைக்காட்டி பலகையும் இல்லாமல் உள்ளது. எனவே கல்லுப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் பிரிவு சாலையில் ஊர் பெயர்பலகை மற்றும் திசைகாட்டி பலகை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கட், திருச்சி.

மேலும் செய்திகள்