தினத்தந்தி புகார் பெட்டி

நாகை, காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-29 17:24 GMT
கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி பஸ் நிலைய வளாகத்தை சுற்றி  அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறது. இதனால் பஸ்கள் நிற்கவும், திரும்பவும்  முடியாமல் டிரைவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த பிளக்ஸ் பேனர்கள் பஸ் பயணிகளுக்கு  இடையூறாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. ஐகோாட்டு ஆணைப்படி பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் ஊரக நிர்வாகம் அறிவிப்பு பலகையும், கண்காணிப்பு கேமராவும் பொருத்த வேண்டும் என்று பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர். 
-பேரூராட்சி பொதுமக்கள்,  மணல்மேடு.
சுகாதார சீர்கேடு
நாகை புதிய பஸ்நிலைய வளாகத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் பகலிலும், இரவிலும் மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி கொண்டு சாலையில் நின்று குடிக்கின்றனர்.  இதனால் பஸ் பயணிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர். மேலும் குடித்து விட்டு தகராறிலும் ஈடுபடுகிறார்கள். பாட்டில்களை சாலையில் உடைத்து விடுவதால் பொதுமக்கள், பஸ் பயணிகளின் கால்களை பதம் பார்த்து விடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-சத்யா பாபு, நாகப்பட்டினம்.
குளம் தூர்வாரப்படுமா? 
வேதாரண்யம் வட்டம் தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி ஊராட்சியில் இடையன் குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 15  வருடங்களாக தூர்வாரப்படாமல்  உள்ளது. இதனால் ஆகாயத்தாமரை புதர் போல் மண்டிகிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது. மழை காலம் என்பதால் விஷ பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-பொதுமக்கள், தலைஞாயிறு.
தொற்றுேநாய் பரவும் அபாயம் 
நாகை மாவட்டம் வடவூர் ஊராட்சி வடக்கு தெருவில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார வளாகத்தின் கழிவுநீர் தொட்டி மிகவும் சிதிலமடைந்து நிரம்பி வழிந்து மழைநீர் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் வீடுகளில் வசிப்பவர்கள்  அவதியடைந்து வருகின்றனர். மேலும் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கழிவுநீர் தொட்டி துர்நாற்றத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும். 
-குமரேசன், வடவூர் ஊராட்சி.
புதர்மண்டி கிடக்கும் பொதுப்பணித்துறை கட்டிடம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் மையப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பாழடைந்து உள்ளது. இதனை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கட்டிடம் மோசமான நிலையில் உள்ளதால் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மழைக்காலமாக உள்ளதால் கட்டிடம் இடிந்து விழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதர்மண்டி கிடக்கும் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-செந்தில்குமார், பெருகவாழ்ந்தான்.
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்
மயிலாடுதுறை அருகே வடகரை மஞ்சள் ஆற்றங்கரை சாலையில் மின்கம்பம் உள்ளது. இதனால் வடகுடி பாலத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமப்பட்டு திரும்பி செல்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தால் அன்னவாசலுக்கு சென்று வந்த அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஹாஜா ஷரீப், அரங்கக்குடி.

மேலும் செய்திகள்