போடி அருகே 12 ஆயிரம் பனை விதைகளை சேகரித்த ஓட்டல் தொழிலாளி
போடி அருகே ஓட்டல் தொழிலாளி 12 ஆயிரம் பனை விதைகளை சேகரித்தார்.
போடி:
போடியை சேர்ந்தவர் முருகன் (வயது 52). ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக பனை விதைகளை சேகரித்து வந்தார். அதன்படி, இதுவரை 12 ஆயிரம் பனை விதைகளை சேகரித்தார். இதைத்தொடர்ந்து அவற்றை தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நட வேண்டும் என்று விரும்பினார்.
இதையடுத்து அவர், சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து பனை விதைகளை நட முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் போடி அருகே சூலப்புரம் பாறைக்குளம் கிராமத்தில் வருகிற புத்தாண்டை (2022-ம் ஆண்டு) முன்னிட்டு 2022 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், போடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணிகண்டன், போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர். அதேபோல் இதில் ஏராளமான சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர்.
இதுகுறித்து முருகன் கூறுகையில், தற்போது சூலப்புரம் பாறைக்குளத்தில் 2022 பனை விதைகள் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 ஆயிரம் பனை விதைகளை, வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் முரளிதரனிடம் வழங்க உள்ளேன் என்றார்.