ஊத்தங்கரையில் பரபரப்பு தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி போலீஸ் விசாரணை

ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2021-09-29 16:59 GMT
கல்லாவி:
ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமாட்சி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருப்பதி (வயது 46). இவர், நேற்று ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்துக்கு வந்தார்.
அவர், திடீரென தான் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் திருப்பதியிடம் இருந்து கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து திருப்பதியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, திருப்பதியின் நிலத்தில் விவசாயம் செய்ய விடாமல் சிலர் தடுப்பதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த திருப்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தாலுகா அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது. திருப்பதியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்