கம்பத்தில் போலீஸ் கண்காணிப்பு கூண்டு திறப்பு
கம்பத்தில் போலீஸ் கண்காணிப்பு கூண்டு திறக்கப்பட்டது.
கம்பம்:
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கம்பம் நகராட்சி அமைந்துள்ளது. இங்கு பலசரக்கு, காய்கறி, கால்நடை தீவனங்கள் விற்பனை மற்றும் உழவர்சந்தை, நகராட்சி வாரச்சந்தை நடைபெறுவதால் கேரள வியாபாரிகளும், பொதுமக்களும் நாள்தோறும் வர்த்தக ரீதியாக கம்பம் நகருக்கு வந்து செல்கின்றனர். இதேபோல் கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு கம்பம்மெட்டு சாலை வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு கேரள மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் கம்பம் பழைய தபால் நிலையம் அருகே தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கம்பம்மெட்டு சாலை பிரிவு வழியாக செல்கின்றன. இதனால் கம்பம்மெட்டு சாலை பிரிவு பகுதியில் எப்போது வாகன போக்குவரத்து இருக்கும். இந்தநிலையில் கம்பம்மெட்டு சாலை பிரிவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு போலீஸ் கண்காணிப்பு கூண்டு அமைத்து, வாகன நெரிசலை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, கம்பம்மெட்டு சாலை பிரிவில் போலீஸ் கண்காணிப்பு கூண்டு அமைக்கப்பட்டது. அதில், மின் இணைப்பு, ஒலிபெருக்கிகள், போலீசார் அமரும் இருக்கைகள் பொருத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கூண்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமை தாங்கி, போலீஸ் கண்காணிப்பு கூண்டை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீரை அவர் வழங்கினார். இந்த விழாவில் கம்பம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டிதநேரு, கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.