திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பலர் மொட்டையடித்து நேர்த்திக்கடனும் செலுத்துவார்கள். தற்போது பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நடைபெறுவதால், கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
ஆண்டுதோறும் புரட்டாசி 3-வது சனிக்கிழமை அன்று கோவிலில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாட்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
2 மணி நேரம் காத்திருந்து...
இதனால் புரட்டாசி 3-வது சனிக்கிழமையன்று கோவிலில் பெருமாளை தரிசிக்க முடியாது என்று எண்ணிய பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே திருவந்திபுரத்திற்கு திரண்டு வந்தனர். காலையில் விஸ்வரூப தரிசனத்திற்கு பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பெருமாளை தரிசனம் தரிசனம் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.