5 மாத பெண் குழந்தை கடத்தல்
ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5 மாத பெண் குழந்தை
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35). பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா(27). இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தொழிலுக்காக பொள்ளாச்சி அருகே ஆனைமலைக்கு வந்த மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், அங்குள்ள பஸ் நிலையத்தில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவில் சாப்பாடு வாங்க பணம் இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்க மணிகண்டன் சென்றார்.
கடத்தல்
இதனால் சங்கீதா மட்டும் குழந்தைகளை கவனித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி, அவரிடம் பணத்தை கொடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்குமாறு கூறினார். மேலும் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வரை குழந்தைகளை பார்த்து கொள்வதாக தெரிவித்தார்.
இதை நம்பிய சங்கீதா பணத்தை வாங்கிக்கொண்டு கடைக்கு செல்ல தயாரானார். மேலும் 5 மாத பெண் குழந்தையை அந்த ஆசாமியின் கையில் கொடுத்தார். உடனே அருகில் மோட்டார் சைக்கிளில் மற்றொரு நபர் வந்தார். அவரது மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் ஏறிய அந்த ஆசாமி, கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார்.
தனிப்படை
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா கூச்சல் போட்டார். மேலும் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னகாமணன், கார்த்திக்குமார் மற்றும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பதிவாகி இருந்த காட்சிகள் மற்றும் சங்கீதா கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
பரபரப்பு
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டனிடம் சிலர் குழந்தையை விலைக்கு தருமாறு கேட்டு உள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது.
இதனால் நீண்ட நாட்களாக நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் குழந்தையை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்ற சம்பவம் ஆனைமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.