ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
தந்தை கண்ணெதிரே ஆற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
நெய்க்காரப்பட்டி:
நேபாள நாட்டை சேர்ந்தவர் தேவேந்திர சிவதர்ஷன். இவர், பழனி அருகே உள்ள பசுபதி புத்தூர் பகுதியில் உள்ள தனியார் பிராய்லர் கோழி நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை இவர், தனது மகன் அமீர் (வயது 10) என்பவருடன், அப்பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் குளித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அமீர் ஆற்றில் மூழ்கி விட்டான்.
தனது கண் எதிரே மகன் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த தேவேந்திர சிவதர்ஷன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர், அமீரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில் நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். ஆனால் இரவு நேரமாகிவிட்டதால் அவர்களால் தேட முடியவில்லை.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து அமீரை தேடினர். அப்போது தண்ணீருக்குள் பிணமாக கிடந்த அமீரின் உடலை மீட்டு அவர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.