அம்மன் கோவிலை சூறையாடிய காட்டு யானைகள்
அம்மன் கோவிலை சூறையாடிய காட்டு யானைகள்
கூடலூர்
கூடலூர் வனக் கோட்டத்தில் தேவாலா அருகே அட்டி பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்பகுதியில் தோட்ட தொழிலாளர் குடும்பத்தினர் வழிபட்டு வரும் அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதிக்கு வந்தது. இதனால் கிராம மக்கள் தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்தனர். இரவு முழுவதும் அப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது.
வழக்கம்போல நேற்று காலை 6 மணிக்கு கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அப்போது அம்மன் கோவிலை காட்டு யானைகள் உடைத்து சூறையாடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோவில் இரும்பு கதவுகள், ஜன்னல்களை வளைத்து சேதப்படுத்தி இருந்தது.
தொடர்ந்து கோவிலுக்கு வைத்திருந்த பூஜை மற்றும் தளவாட பொருட்களை நாசம் செய்து இருந்தது. இதைக்கண்டு தோட்டத் தொழிலாளர்கள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து தோட்டத்தொழிலாளர்கள் கூறியதாவது:-
காட்டு யானைகள் இரவு முழுவதும் கிராமத்தில் முற்றுகையிட்டு அம்மன் கோவிலை சூறையாடி உள்ளது. மேலும் அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளது. ஏற்கனவே 2 முறை கோவிலை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ள நிலையில் 3-வதாக தாக்கி உள்ளது. காட்டு யானைகள் வருகையை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. சேதமடைந்த கோவிலை புனரமைக்க நிதியும் ஒதுக்கவில்லை.
தோட்டத் தொழிலாளர்கள் இந்த செலவில் கோவிலை பராமரித்து வருவதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே காட்டுயானைகள் தாக்காமலிருக்க கோவிலைச் சுற்றிலும் வேலி அமைக்க வனத்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே சம்பவ இடத்தை நாடுகாணி வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.