தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆண்டுக்கு 9 ஆயிரம் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை டீன் நேரு தகவல்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆண்டுக்கு 9 ஆயிரம் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, டீன் நேரு தெரிவித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆண்டுக்கு 9 ஆயிரம் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, டீன் நேரு தெரிவித்தார்.
உலக இருதய தினவிழா
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருதய மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் உலக இருதய தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு தலைமை தாங்கி, இருதய சிகிச்சை பிரிவில் சிறப்பாக பணியாற்றிய நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார்.
கண்காணிப்பாளர் பாவலன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
9 ஆயிரம் பேருக்கு சிகிச்சை
விழாவில் டீன் நேரு பேசியதாவது:-
இருதய நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 29-ந் தேதி உலக இருதய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சை பிரிவில் புறநோயாளியாக ஆண்டுக்கு 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயிரத்து 400 பேருக்கு இருதய நோய்களுக்கான ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதிநவீன சிகிச்சையில் ஆஞ்சியோ பிளாஸ்ட் 100 பேருக்கும், ஆஞ்சியோகிராம் 250 பேருக்கும் செய்யப்பட்டு உள்ளது. முழுமையாக முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவல் டாக்டர்கள் பாலமுருகன், கணேசன், பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
--------------