திண்டுக்கல்லில் இருந்து விளாத்திகுளத்துக்கு மாந்திரீகத்துக்காக காரில் தேவாங்குகளை கடத்திய வாலிபர் உள்பட 2 பேர் கைது

திண்டுக்கல்லில் இருந்து விளாத்திகுளத்துக்கு மாந்திரீகத்துக்காக காரில் தேவாங்குகளை கடத்திய வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-29 12:09 GMT
எட்டயபுரம்:
திண்டுக்கல்லில் இருந்து விளாத்திகுளத்துக்கு மாந்திரீகத்துக்காக காரில் தேவாங்குகளை கடத்திய வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட குருவார்பட்டியில் நேற்று முன்தினம் இரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து விளாத்திகுளம் நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை சந்தேகத்தின்பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் இருந்த ஒரு கூண்டில் 5 தேவாங்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தேவாங்குகள் கடத்தல்
விசாரணையில், காரில் இருந்தவர்கள் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்த பாலு மகன் கனகராஜ் (வயது 22), வேம்பார் பகுதியைச் சேர்ந்த கொம்புத்துரை (40) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதவாது, மாந்திரீகம் செய்வதற்காக மந்திரவாதி ஒருவருக்கு 5 தேவாங்குகளை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து விளாத்திகுளத்திற்கு அவர்கள் கடத்தி வந்துள்ளனர்.
மேலும், மந்திரவாதி பேச்சை கேட்டு, மாந்திரீகத்தால் ஒருவரை பில்லி சூனியம் வைத்து கொல்வதற்காக திட்டமிட்டதாகவும், அந்த நபரை நினைத்து பூஜைசெய்து தேவாங்கை கொன்றால் அந்த நபர் இறந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தேவாங்கை மந்திரவாதிக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து தேவாங்குகளை கடத்தி வந்த கனகராஜ், கொம்புத்துரை ஆகிய 2 பேரையும் விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் சங்கரலிங்கபுரம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் கூண்டில் இருந்த 5 தேவாங்குகளும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
வனச்சரக அதிகாரிகள் அந்த 2 பேரையும் கைது செய்து  விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் 5 தேவாங்குகளும் விளாத்திகுளம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. மேலும், தேவாங்குகளை கடத்தி வரச்சொன்ன மந்திரவாதி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
--

மேலும் செய்திகள்