மைசூரு தசரா விழாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைக்கிறார்

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைப்பார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2021-09-28 21:17 GMT
பெங்களூரு: உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைப்பார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

மைசூரு தசரா விழா

ஆண்டுதோறும் சிவராத்திரியையொட்டி மைசூருவில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. மைசூரு தசரா விழா உலக புகழ் பெற்றது. இந்த விழாவை தொடங்கி வைக்க சாதனையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்துவதை கர்நாடக அரசு வழக்கமாக கொண்டுள்ளது.

அந்த வகையில், நடப்பு ஆண்டில் மைசூரு தசரா விழா வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை தொடங்கி வைக்க யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து மாநில அரசின் உயர்மட்ட குழு கூட்டம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தசரா விழாவை தொடங்கி வைக்க சிறப்பு அழைப்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு வழங்கப்பட்டது.

மராட்டிய கவர்னராக...

மைசூரு தசரா விழா தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த விழாவை தொடங்கி வைக்க முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். மத்திய மந்திரியாகவும், மராட்டிய மாநில கவர்னராகவும் எஸ்.எம்.கிருஷ்ணா பணியாற்றி இருக்கிறார். மண்டியா மாவட்டம் சோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அவர் பி.ஏ., பி.எல். முடித்துள்ளார். அமெரிக்காவில் மேல் படிப்பை முடித்துள்ளார்.

89 வயதாகும் எஸ்.எம்.கிருஷ்ணா, பெங்களூருவில் உள்ள ஜெகத்குரு ரேணுகாச்சார்யா சர்வதேச சட்ட கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். பிரஜா சோசியலிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து அவர் அரசியலுக்கு வந்தார். காங்கிரசில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்