திருநள்ளாறில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருநள்ளாறில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
காரைக்கால், செப்.29-
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை அடுத்த தென்னங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 35), நேற்று முன்தினம் இரவு செல்லூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள், ஹேமலதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து, ஹேமலதா திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.