புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939078888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் ஆவின் நகர் முதல் தெருவில் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியின்றி சாலையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் கொசுத்தொல்ைலயும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜ்குமார், பொதும்பு.
குடிநீர் பிரச்சினை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் ஜமீன் கொல்லங்கொண்டான் ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் எண்ணற்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
-பழனி, ஜமீன் கொல்லங்கொண்டான்.
எரியாத தெருவிளக்குகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வீரப்பா நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதன் காரணமாக இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் இரவு நேரத்தில் வெளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். மேலும், சமூக விரோதிகள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, இப்பகுதியில் தெருவிளக்குகள் எரிய மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜசேகரன், காரைக்குடி.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவைகள் தெருக்களில் ஆங்காங்கே படுத்து தூங்குவதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்துவதால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜ், ராமேசுவரம்.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தாயில்பட்டி ரோடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டது. இதனால் தற்போது அங்குள்ள சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே, குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-குமார், சாத்தூர்.
மின்மயானம் தேவை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மின்மயான வசதி இல்லை. இதன் காரணமாக இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இப்பகுதியில் மின்மயான வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-ஸ்டீபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.
கழிவுநீரால் விபத்து
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு அம்மன் கோவில்பட்டியில் இருந்து வாசம்பட்டி வரை சாலைகளில் சாக்கடை கழிவுநீர் தேங்கி, குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சாலைகளில் தேங்கியுள்ள கழிவு நீர், குப்பைகளை அகற்றிட வேண்டும்.
-முத்துமாணிக்கம், கீழவளவு.
தார்ச்சாலை வேண்டும்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் கண்ணங்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழக்காவனவயல் கிராமத்தில் இருந்து ஈகரை, கோட்டவயல் ஆகிய ஊர்களுக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை. மழைக்காலத்தில் சாலைகள் சேறும், சகதியாகவும் இருப்பதால் போக்குவரத்து தடைபடுகிறது. இதனால் வேறொரு பாதையில் 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
-கணேசன், கீழக்காவனவயல்.
பஸ் வசதி
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கீழவாசல், தெற்குவாசல், வில்லாபுரம், அவனியாபுரம் வழியாக குறைவான அளவு தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதலால் இவ்வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
-ரவீந்திரநாத், வில்லாபுரம்.