ஓடும் பஸ்சில் நகை திருடிய 2 பெண்கள் கைது
நயினார்கோவில் பகுதியில் ஓடும் பஸ்சில் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நயினார்கோவில்,
ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பரமக்குடிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் நயினார்கோவில் அருகே உள்ள நகரம் கிராமத்தை சேர்ந்த பூமிநாதனின் மனைவி சரோஜா(வயது65) என்பவர் பயணம் செய்தார்.அப்போது 2 பெண்கள், சரோஜாவிடம் பேச்சு கொடுத்து பழகியதாக தெரிகிறது. பின்னர் 3 பேரும் நயினார்கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். சிறிது தூரம் சென்றவுடன் சரோஜா தனது கழுத்தை பார்த்தார். தான் அணிந்திருந்த 6 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடன் பஸ்சில் வந்த 2 பெண்கள் குறித்து சந்தேகம் இருப்பதாக அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் அந்த பெண்ணை தேடிய போது, நயினார்கோவிலில் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல நின்றிருந்த அந்த 2 பெண்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் பையில் காணாமல் போன நகை இருந்தது. இதையடுத்து 2 பெண்களையும் நயினார்ேகாவில் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் நகையை திருடியவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி ரஞ்சிதா (27) மற்றும் சுரேஷ் மனைவி மாரி (36) என தெரிய வந்தது. இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.