கர்ப்பிணியை கவனிக்காமல் பிறந்தநாள் கொண்டாடிய நர்சுகள்

சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணியை கவனிக்காமல் நர்சுகள் பிறந்தநாள் கொண்டாடினர். இதனால் குழந்தை இறந்தே பிறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-28 18:16 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இளவரசி(வயது 24). 
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இளவரசிக்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள், ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 
பின்னர் அவர், சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள், இளவரசியை  பரிசோதனை செய்தனர். அதன்பிறகு சிகிச்சை ஏதும் அளிக்கவில்லை. 
இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஒரு நர்சுக்கு பிறந்தநாள் என்பதால், நர்சுகள் ஒன்று சேர்ந்து ஆஸ்பத்திரியின் பின்பகுதியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது.

இறந்து பிறந்த குழந்தை 

அந்த சமயத்தில் இளவரசிக்கு பிரசவ வலி அதிகரித்தது. ஆனால் அங்கு பணியில் யாரும் இல்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஓடிச்சென்று நர்சுகளிடம் தெரிவித்தனர். 
அதன்பிறகு இளவரசியை நர்சுகள் அவசர, அவசரமாக அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. அப்போது இளவரசிக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்தது. 
இதனால் ஆத்திரமடைந்த இளவரசியின், உறவினர்கள், நர்சுகள் மற்றும் டாக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போராட்டம் நடத்தினர்.

உறவினர்கள் புகார் 

இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து இளவரசியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ஊரில் இருந்து வரும்போதே இளவரசி நன்றாகத்தான் இருந்தார். குழந்தையின் அசைவும் அவருக்கு தெரிந்தது. சிதம்பரம் ஆஸ்பத்திரிக்கு வந்ததும் நர்சுகள் பரிசோதனை செய்தனர். அதன்பிறகு அவரை கவனிக்கவில்லை. மாறாக நர்சுகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆஸ்பத்திரியின் பின்பகுதிக்கு சென்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்கள். அந்த சமயத்தில் இளவரசி பிரசவ வலியால் துடித்தார். அவரை கவனிக்க நர்சுகளோ, டாக்டரோ இல்லை. நர்சுகள் மற்றும் டாக்டர்களின் அலட்சியத்தால்தான் இளவரசிக்கு குழந்தை இறந்தே பிறந்தது என்றனர். 

போலீசார் விசாரணை 

அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து இளவரசியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து டாக்டர்கள், நர்சுகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்