வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெண்ணையூர் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் அபிஷேகநாதன். இவருடைய மகன் மகிமை தாஸ் (வயது 21). அதே பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமி, கடந்த 2019-ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 27.3.2019 அன்று சிறுமி பள்ளிக்கூடம் சென்றதும், சிறுமியின் தாய் சிதம்பரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் சிறுமியின் தாய், சிதம்பரத்தில் இருந்து மாலையில் வீட்டுக்கு திரும்ப நீண்ட நேரம் ஆனதால், பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு வயலில் கட்டியிருந்த மாட்டை வீட்டுக்கு ஓட்டி வரும்படி கூறினார்.
போக்சோ சட்டத்தில் கைது
இதையடுத்து சிறுமி அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மகிமை தாஸ், சிறுமியை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற விவசாயி ஒருவர், மகிமை தாசை பிடிக்க முயன்றார். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி சிறுமியின் தாய், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகிமை தாசை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எம்.எழிலரசி தனது தீர்ப்பில் மகிமை தாசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ரூ.2 லட்சம் இழப்பீடு
மேலும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள்படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.