வைகை அணையில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் பலி
வைகை அணையில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் பலியானார். பிறந்த நாளில் அவர் உயிரிழந்திருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
ஆண்டிப்பட்டி:
கல்லூரி மாணவர்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். அவருடைய மகன் மதன்குமார் (வயது 20). இவர், தேக்கம்பட்டி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதன்குமாருக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் மதன்குமார் தனது நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் அவர், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து வைகை அணையின் பிக்கப் ேடம் அருகே குளித்து கொண்டிருந்தார்.
நீரில் மூழ்கி பலி
அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரது நண்பர்கள், நீரில் மூழ்கிய மதன்குமாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே மதன்குமார் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் அன்று மதன்குமார் நீரில் மூழ்கி இறந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.