பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி

பெரியகுளத்தில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Update: 2021-09-28 17:33 GMT
பெரியகுளம்: 

தேனி அருகே பூதிப்புரத்தை அடுத்துள்ள வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி கலாவதி (வயது 35). இவர் கடந்த 2012-ம் ஆண்டு போடிக்கு செல்லும் வழியில் உள்ள தீர்த்த தொட்டி முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு சாலையில் நடந்து சென்றபோது தேனியிலிருந்து போடி நோக்கி சென்ற அரசு பஸ் கலாவதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கலாவதி உயிரிழந்தார். 

இந்த விபத்தில் நஷ்டஈடு கேட்டு பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரியகுளத்தில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திலகம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சத்து 15ஆயிரத்து 798-ஐ நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டார். ஆனால் நஷ்டஈடு தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்குவரத்து கழகத்தினர் வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து பாண்டி, நிறைவேற்றுதல் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி திலகம், நஷ்டஈடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.

 இதனைத்தொடர்ந்து நேற்று காலை கோர்ட்டு அமீனாக்கள் ரமேஷ், மாலதி பெரியகுளம் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போடிக்கு செல்வதற்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து கழக அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தீர்வு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஜப்தி செய்த அரசு பஸ் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்