தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சாலை பணி தொடங்குமா?
தேனி மாவட்டம் காமக்காபட்டி மற்றும் கல்லுபட்டி இடையே தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் குண்டும், குழியுமான இருந்த பழைய சாலையை பெயர்த்து சமப்படுத்தினர். பின்னர் சாலையோரத்தில் ஜல்லிகற்களை கொட்டி குவித்தனர். அதோடு சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. அதன்பின்னர் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி மீண்டும் சாலை அமைக்கும் பணியை தொடங்குவார்களா? -முகிலன், காமாக்காபட்டி.
சேதமான பாலம்
திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தில் மணப்பாறை சாலையில் உள்ள சிறிய பாலம் சேதம் அடைந்து விட்டது. பாலத்தில் 2 இடங்களில் பள்ளம் உருவாகி உள்ளது. இரவில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சேதமான பாலத்தை இடித்து விட்டு புதிதாக பாலம் கட்ட வேண்டும். -கவின்பிரபு, குஜிலியம்பாறை.
குண்டும், குழியுமான சாலை
சாணார்பட்டி ஒன்றியம் கோணப்பட்டியில் இருந்து அஞ்சுகுழிப்பட்டி வரையுள்ள தார்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட விரைவாக வரமுடியவில்லை. மேலும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -வேல்முருகன், கோணப்பட்டி.
கதம்ப வண்டுகள் அச்சுறுத்தல்
திண்டுக்கல் ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள ஜம்புளியம்பட்டி பஸ்நிறுத்தம் அருகே இருக்கும் அரச மரத்தில் ஏராளமான கதம்ப வண்டுகள் உள்ளன. இவை பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மட்டுமின்றி அந்த வழியாக வாகனங்களில் செல்வோரையும் கொட்டுகின்றன. பொதுமக்களை அச்சுறுத்தும் கதம்ப வண்டுகளை அகற்ற வேண்டும். -எட்வின், ஏர்போர்ட்நகர்.
பொதுக்கழிப்பிடம் சீரமைக்கப்படுமா?
தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை சாலையில் அரசு மருத்துவமனை மட்டுமின்றி பல அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் பகுதியாக இருக்கிறது. இங்குள்ள பொதுக்கழிப்பிடம் தற்போது பயன்பாட்டில் இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுக்கழிப்பிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மணிபாரதி, பெரியகுளம்.
எரியாத தெருவிளக்குகள்
உத்தமபாளையம் தாலுகா கோம்பையில் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. இரவு நேரங்களில் சில பகுதிகள் இருளில் மூழ்கிவிடுகின்றன. இதனால் இரவில் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்குவதற்கு தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -செந்தில்குமார், கோம்பை.
தெருநாய்கள் தொல்லை
வத்தலக்குண்டு காந்திநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. இரவு நேரத்தில் வேலை முடிந்து செல்வோரை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. தெருநாய்களின் தொல்லையை தடுக்க வேண்டும். -அக்கிம்சேட், வத்தலக்குண்டு.
பாலத்தை சீரமைக்க வேண்டும்
குஜிலியம்பாறை ஒன்றியம் கருங்கல் ஊராட்சி ஆணைப்பட்டியில் உள்ள பாலம் சேதம் அடைந்து விட்டது. கனமழை பெய்தால் பாலம் மேலும் சேதமாகி விடும் வாய்ப்பு உள்ளது. அதற்குள் பாலத்தை சீரமைக்க வேண்டும். ஆறுமுகம், கருங்கல்.