‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழபாப்பாக்குடி வழியாக பல்வேறு பஸ்கள் சென்று வருகின்றன. இந்த ஊரில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. முன்பு அங்கு நின்ற மரத்துக்கு அடியில் நின்று பயணிகள் பஸ் ஏறி சென்று வந்தனர். தற்போது அந்த மரமும் வெட்டப்பட்டு விட்டது. இதனால் மழையிலும், வெயிலிலும் நின்று பயணிகள் பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, இங்கு பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- வனிதா, கீழபாப்பாக்குடி.
சாலையில் ஆபத்தான பள்ளம்
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை சிவன் கோவில் வடக்கு ரதவீதியில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி குழந்தைகளும் நடந்து செல்வதற்கு கஷ்டப்படுகிறார்கள். ஆகையால் ஆபத்தான அந்த பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ஜானகிராமன், பாளையங்கோட்டை.
குடிநீர் வேண்டும்
பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள பி.ஏ.பிள்ளைநகருக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 5 நாட்களாக தண்ணீர் வரவில்லை. எனவே, சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- முத்துசாமி, பி.ஏ.பிள்ளைநகர்.
பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?
பாளையங்கோட்டை யூனியன் திருமலைக்கொழுந்துபுரத்தில் இருந்து மாலை 3 மணிக்கு டவுன் பஸ் புறப்பட்டு நெல்லை சந்திப்புக்கு செல்கிறது. அதன்பிறகு அந்த பஸ் மீண்டும் மாலை 5 மணிக்கு தான் திருமலைக்கொழுந்துபுரத்துக்கு திரும்பி வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். அருகில் உள்ள மேலப்பாட்டத்துக்கு மாலை 4 மணிக்கு டவுன் பஸ் வருகிறது. அந்த பஸ் சேவையை திருமலைக்கொழுந்துபுரம் வரை நீட்டித்தால், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன் அடைவர். அதற்கு அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.
- அம்மாபொன்னு, திருமலைக்கொழுந்துபுரம்.
காத்திருக்கும் ஆபத்து
விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் மெயின் ரோட்டில் வாய்க்கால் பாலம் அருகில் இந்தியன் வங்கி கீழ்ப்புறம் பழமையான மருதமரம் உள்ளது. பட்டுபோய் எந்த நேரத்திலும் சாலையில் விழும் நிலையில் இருப்பதால், அங்கு ஆபத்து காத்திருக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பட்டுபோன மரத்தை அதிகாரிகள் அகற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- ரகுமான், விக்கிரமசிங்கபுரம்.
பதம் பார்க்கும் முட்செடிகள்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட வெள்ளானைக்கோட்டை ஆலமரத்து பஸ் நிறுத்தத்தில் இருந்து தாருகாபுரம் வரை உள்ள சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அவை அந்த வழியாக பஸ், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களை பதம் பார்க்கின்றன. எனவே, முதலில் அந்த முட்செடிகளை வேரோடு அகற்ற வேண்டும். பின்னர் அங்கு புளி, புங்கன், இலுப்ைப, நாவல், அத்தி, வேம்பு போன்ற மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும்.
- இரா.சுந்தரமூர்த்தி, தாருகாபுரம்.
கால்வாய் தூர்வாரப்படுமா?
கடையநல்லூர் பாப்பான் கால்வாயின் ஒரு பகுதியில் புதர்கள் மண்டி காணப்படுகின்றன. இதனால் மழைக்காலத்தில் அங்கு தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக கொசு உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாப்பான் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- எஸ்.கே.எம்.ஹபிபுல்லா, கடையநல்லூர்.
பஸ் வசதி தேவை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியன் மானாடு-தண்டுபத்து ஊராட்சிக்கு உட்பட்டது சிதம்பரபுரம் கிராமம். இங்குள்ள மக்கள் மருத்துவ சேவை மற்றும் பிற காரணங்களுக்காக உடன்குடி போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டுமானால், அருகில் உள்ள தண்டுபத்து கிராமத்துக்கு சென்றுதான் பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சிதம்பரபுரத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- செல்வகுமார், சிதம்பரபுரம்.
சாலை வசதி இல்லை
சாத்தான்குளம் தாலுகா கொம்பன்குளம் அருகே உள்ள துவர்குளம் கிராமத்தில் சரிவர சாலை வசதி இல்லை. பஸ் வசதியும் இல்லை. எனவே, இதுபோன்ற அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- முத்துபாண்டி, துவர்குளம்.