சரண் அடைந்த 5 பேரிடம் 3 நாள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி

திண்டுக்கல்லில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில், சரண் அடைந்த 5 பேரை 3 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-09-28 16:08 GMT
திண்டுக்கல்:

தலை துண்டித்து பெண் கொலை 

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன். திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் வசித்து வந்த அவர், கடந்த 2012-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக, அந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு விட்டனர்.

 இதற்கிடையே பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நந்தவனப்பட்டியை சேர்ந்த நிர்மலா (வயது 60), கடந்த 22-ந்தேதி செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனியில் தலை துண்டித்து கொல்லப்பட்டார். மேலும் அவருடைய தலையை பசுபதி பாண்டியனின் வீட்டு முன்பு கொலையாளிகள் வீசி சென்றனர்.

கோர்ட்டில் 5 பேர் சரண்

இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்தது மற்றும் உதவி செய்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் மேலும் 5 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே நிர்மலா கொலை வழக்கு தொடர்பாக ரமேஷ்குமார், சங்கிலிகருப்பன், தமிழ்செல்வன், அலெக்ஸ்பாண்டி, முத்துமணி ஆகிய 5 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவலில் எடுத்து விசாரணை 

இந்தநிலையில் திருச்சி சிறையில் இருந்த 5 பேரும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதையடுத்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி தாடிக்கொம்பு போலீசார் கோர்ட்டில் மனு அளித்தனர்.

ஆனால் 3 நாட்கள் மட்டுமே போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கார்த்திக் அனுமதி அளித்தார். இதையடுத்து 5 பேரையும் காவலில் எடுத்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் காவலில் எடுத்து அவர்களை விசாரிக்கும் பட்சத்தில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்