ஈரோட்டில் ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதிய லாரி போக்குவரத்து பாதிப்பு
ஈரோட்டில் ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோட்டில் ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி மோதியது
ஈரோடு வெண்டிபாளையத்தில் இருந்து சோலார் செல்லும் சாலையில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் பாலத்துக்கு சிறுது தூரத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அதிக உயரம் கொண்ட வாகனங்கள் சென்று, அதனால் ரெயில்வே நுழைவு பாலம் சேதமடைவது தடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி காகிதம் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த லாரி நுழைவு பாலத்தை கடக்க முயன்றபோது தடுப்பு கம்பியின் மீது மோதியது. இதில் தடுப்பு கம்பி உடைந்து லாரியின் மீது விழுந்தது. இதனால் அதன் டிரைவர் லாரியை மேற்கொண்டு இயக்க முடியாமல் அங்கேயே நிறுத்தினார்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடந்தது. அப்போது தடுப்பு கம்பி அப்புறப்படுத்தப்பட்டு லாரி மீட்கப்பட்டது. வெண்டிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சோலார் பகுதிக்கு செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையையும், ஈரோட்டையும் இணைக்கும் சாலையாக உள்ளதால், வெண்டிபாளையம் கட்டளை கதவணை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே தடுப்பு கம்பியில் லாரி மோதி நின்றதால் அந்த வழியாக சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கோணவாய்க்கால் வழியாக சுற்றி சென்றார்கள்.