சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது காலத்தின் தேவை-ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பேசினார்
மதுரை
சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பேசினார்.
வக்கீல்கள் சேமநல நிதி
மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் சேமநல நிதி அறக்கட்டளை தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி துரைசாமி தலைமை தாங்கினார்.
அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் அஜ்மல்கான் வரவேற்புரை ஆற்றினார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இந்த அறக்கட்டளையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வக்கீல் தொழில் என்பது உடனடியாக பொருளீட்டும் தொழில் அல்ல. அர்ப்பணிப்பும், நேர்மையான செயல்பாடுகளும் ஒரு வக்கீலை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். இந்தியாவில் சுமார் 2,800 சட்ட கல்லூரிகள் உள்ளன.
சட்டக் கல்வி மேம்பாடு
வக்கீல் தொழில் போட்டி நிறைந்தது. ஆங்காங்கே சில குறைபாடுகள் இருப்பதால், சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது காலத்தின் தேவை.
பொதுவாக கல்வி என்பது ஒரு மனிதனை மேன்மை அடையச்செய்ய வேண்டும். கற்ற கல்வி சமுதாய மாற்றத்திற்காக பயன்பட வேண்டும். ஒருவரின் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளக் கூடிய விஷயமாக மட்டுமே அது இருக்கக்கூடாது. நீதிமன்றம் என்பது நீதிபதிகள் மட்டுமல்லாது, வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் போன்றவர்களை உள்ளடக்கியது தான். நீதிபதி பதவி என்பது மற்ற துறை பதவிகளை போன்றதுதான். நீதி பரிபாலனத்தை இறைபணியாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இறைவனின் பணியை யாராலும் செய்ய இயலாது.
நீதிபதி பதவியும் மற்ற பதவிகளை போல நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டிய ஒரு பணியாகும். வக்கீல்கள் சேமநலநிதி அறக்கட்டளை தொடங்கியது ஒரு நல்ல முயற்சி. இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் வக்கீல் ஆனந்தவல்லி நன்றி கூறினார்.
30 லட்சம் ரூபாய் நிதி
வக்கீல்கள் சேமநல நிதிக்கு முதல் நன்கொடையாக மூத்த வக்கீல் அஜ்மல்கான் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
நீதிபதி புகழேந்தி தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் ரூபாய் வழங்கினார். இதுபோல பல்வேறு வக்கீல்களும் நிதி வழங்கினர். நேற்று ஒரே நாளில் 30 லட்சம் ரூபாய் வரை நிதி வசூலானது.
அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் பேசுகையில் இந்த அறக்கட்டளையின் நோக்கங்களை எடுத்துரைத்தார். நன்கொடை வழங்கியவர்களுக்கு தலைமை நீதிபதி நினைவுபரிசு அளித்து கவுரவித்தார். முன்னதாக சமீபத்தில் இறந்த வக்கீல்கள் சரவணன், அன்பு சரவணன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் தலா 25 ஆயிரத்திற்கான காசோலையை தலைமை நீதிபதி வழங்கினார்.